சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்' என்பார்கள். நமக்கு உடலே சுவர். நல்ல உடல் நலமே, நல்ல மன நலத்துக்கு ஆதாரம். சுவர் அற்புதமாக அமைந்து விட்டதெனில் அதில் எத்தகைய அழகிய ஓவியத்தை வேண்டுமானாலும் வரையலாமே!
உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மன ரீதியாகவும் பலவீனமாக இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அதே போன்று மனம் பலவீனமாக இருந்தாலும் உடலால் உற்சாகமாக இயங்க முடியாது.
மனம் சோர்வுற்றிருக்கும்போது ஓர் அடி எடுத்து வைக்கக்கூட சக்தி இல்லாததுபோல் நாம் அனைவருமே உணர்ந்திருப்போம்.
மனத்தின் இயக்கமும் உடலின் இயக்கமும் இப்படி ஒன்றையொன்று சார்ந்தே அமைந்திருக்கின்றன. இரண்டுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பு புரிந்தும் அவற்றின் நலனில் நாம் கவனம் செலுத்துவதில்லை. குறிப்பாக, உடல்நலம் குறித்த மிகப்பெரிய அலட்சியம் நம்மிடையே இருக்கிறது.
அந்த அலட்சியத்தின் காரணமாகத்தான் பல்வேறு உடல் பிரச்னைகளுக்கு ஆளாகிறோம். அதன் விளைவாக மனத்தின் நலத்தையும் இழக்கிறோம். உடல், மனம் இரண்டும் பாதிக்கப்பட, வாழ்க்கையின் சந்தோஷங்களையும் இழக்கிறோம்.
உடல் பலமாக இருந்தால் என்னென்ன சாதிக்கலாம்? இதற்கு சீனாவைத்தான் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லா துறைகளிலும் சீனா நம் நாட்டைவிட பல மடங்கு முன்னேறியுள்ளது. அதற்குக் காரணம், கம்யூனிஸம் மட்டும் அல்ல. சீன மக்கள் பலசாலிகள். கோல்முட் என்ற இடத்திலிருந்து லாஸா வரை பனிமலை மேல் ரயில் பாதை போட்டு உலக தொழில் நுட்ப வல்லுனர்களை பிரமிக்க வைக்கிறார்கள். அதுபோன்றே கடல் மேல் 36 கிமீ நீளத்துக்கு பாலம் கட்டியிருக்கிறார்கள். 2008-ல் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்காக அசுர வேகத்தில் பணிபுரிகிறார்கள். மக்கள் பலம்தான் இத்தனை சாதனைகளுக்கும் காரணம்.
பலவிதமான உடற்பயிற்சிக் கலைகள் மூலமாக சீன மக்கள் உடல் பலத்தைப் போஷிக்கிறார்கள். Tai chi போன்ற கலைகளின் வாயிலாக அங்கே உடல்பலமும் திறமையும் கலை நயமும் பேணப்படுகிறது. அதன் பலன், பொருளாதாரம், விளையாட்டு, விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்று எல்லா துறைகளிலும் பிரகாசிக்கிறது.
நல்ல ஆரோக்கியம் என்பது தானாக வருவது அல்ல. நடனமாடி, விளையாடி,ஓடி, உடலை வில்லாக வளைத்து அந்த இலக்கை அடைய வேண்டும். பரதம், விளையாட்டு போன்றவை எல்லாம் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கக்கூடிய அற்புதக் கலைகள். ஆனால், அவை நமது வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்கப்படவில்லை.
பரதநாட்டியம் என்பது மேடைகளில் மட்டுமே ஆடப்படுகிறது. அக்கலையை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டால் நமது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும். பள்ளிகளில் உடல்கல்வி இருக்கிறது. ஆனால், எவ்வளவு தீவிரமாக. உடல்கல்வி மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது என்பதுதான் கேள்விக்குறி. மன பலம் என்கிற வார்த்தையைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருகிற நாடு ஜப்பான்.
அணுகுண்டு வீச்சுக்குப் பிறகு ஜப்பான் அழிந்துவிட்டது என்றுதான் எல்லோரும் கருதினார்கள். ஆனால், உலகமே வியந்து போகும் அளவுக்கு ஜப்பான் அனைத்துத் துறைகளிலும் இன்றைக்கு முன்னணியில் இருக்கிறது.
சாம்பலில் இருந்து எழுச்சி பெற வேண்டும் என்று மன வலிமையோடு போராடியதால்தான் ஜப்பானால் இத்தகைய சாதனையை செய்ய முடிந்தது. உடல்பலத்துக்கு சீனா, மன பலத்துக்கு ஜப்பான் என்று அடையாளப்படுத்தினாலும், இரண்டு நாடுகளுமே மன பலம், உடல் பலம் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்துத்தான் வெற்றியை அடைந்திருக்கின்றன. யோகாவின் தாத்பர்யமாக இருக்கும் மனஉடல் ஒருங்கிணைப்பு, நாடுகளையே வெற்றியடைய வைக்கிறது எனில் மனிதர்களின் வெற்றிக்கு உதவி செய்யாதா என்ன?
மேலே சொன்ன விவரங்களின் பின்னணியில் யோகா செயலாற்றும் முறை பற்றிப் பார்க்கலாம். ஒரு பொருள் பற்றி முழுமையாகத் தெரியாமல் அதைப் பயன்படுத்துவதற்கும், தெரிந்துகொண்டு பயன்படுத்து வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கணிப்பொறியை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். கணிப்பொறி அளப்பரிய ஆற்றல் கொண்டது. அதைப் பயன்படுத்தி எண்ணற்ற வேலைகளைச் சாதிக்க முடியும். ஆனால் கணிப்பொறி பற்றியும், அதன் ஆற்றல் பற்றியும், உங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை எனில் அதை வைத்துக்கொண்டு உங்களால் என்ன செய்ய முடியும்? ஒரு பொம்மையைப் போல் அது உங்கள் வீட்டில் விளையாடப் பயன்படும். அவ்வளவுதான்.
கணிப்பொறியின் திறன், செயல்பாடு பற்றி முழுமையாகக் கற்றுக்கொண்ட பிறகு அதை பொம்மை போலவா கருதுவீர்கள்? அதன் மூலமாகப் பல வேலைகளை முடித்து விட மாட்டீர்களா?
மனமும் அப்படிப்பட்டதுதான். அதன் செயல்திறனை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளாதவரை உங்களால் எதையும் சாதிக்க முடியாது. மாறாக, மனத்தின் ஆற்றலையும், எல்லையில்லா அதன் சக்தியையும் புரிந்துகொண்டீர் களேயானால் வாழ்க்கை மிகச் சுலபமாகிவிடும்.
அதேபோன்று உடலின் ஆற்றலையும் புரிந்துகொண்டு நாம் செயல்படவேண்டும்.
நமது உடலின் சக்தியையும், மனத்தின் ஆற்றலையும் புரிந்து கொள்ளவும், அவற்றை முழுமையாக வெளிக்கொண்டு வரவும் அறிவியல் முறைப்படி உதவி செய்கிற ஓர் அற்புதம்தான் யோகா. உடல் மற்றும் மனத்தின் ஆற்றல் பிடிபட பிடிபட, வாழ்க்கைப் பாதையின் சூட்சுமங்கள் புலப்படுகின்றன. பயணம் சுலபமாகி விடுகிறது.
யோகாவின் மூலமாக உடலும், மனமும் வலிமை மிகுந்ததாக மாறுகின்றன. ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமெனில் அதற்கு சக்தி தேவை. உடலோ அல்லது மனமோ சோர்வாக இருக்கையில் எந்தக் காரியத்தைச் செய்வதற்கும் நமக்கு உற்சாகம் வராது. சக்தியே இல்லாததுபோல் உணர்வோம். அந்த நிலையில்கூட உடல் மற்றும் மனத்தின் சக்தியைத் திரட்டி, ஒருங்கிணைத்து ஒரு செயலைச் செய்ய வைக்கிறது யோகா.
உடல் மற்றும் மனம் தவிர்த்து நமக்குள் ஆத்மா என்றோர் அம்சம் உண்டு. அதுவே இறை அம்சம், இறை சக்தி என்று அழைக்கப்படுகிறது.
எதன்மீதும் பற்றற்று இருப்பதே இறை சக்தி. 'பற்றுக பற்றற்றான் பற்றினை' என்று கூறப்படுவதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆத்மாவின் இயல்பும் அதுதான். எதன் மீதும் பற்றின்றி சமநிலையில், தன் இயல்புநிலையில் இருப்பது.
ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் இதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம். அறையின் வெப்பநிலையில் தண்ணீர் இருக்கிறது. அதைச் சூடுபடுத்துகிறீர்கள். தண்ணீரின் வெப்பநிலை 10 டிகிரி உயர்ந்திருப்பதாக வைத்துக்கொள்வோம். தண்ணீர் அதே வெப்பநிலையிலா தொடர்ந்து இருக்கும்? மெல்ல மெல்ல தனது இயல்பான வெப்பநிலைக்குத் திரும்பிவிடும் இல்லையா?
வெப்பநிலை மைனஸில் போகும் அளவுக்குத் தண்ணீரை குளிர வைத்தாலும் சரி, தண்ணீர் அதே நிலையில் தொடர்ந்து இருப்பதில்லை. தனது பழைய நிலைக்கே திரும்புகிறது. ஆத்மாவும் இப்படித்தான்.
மிகப்பெரிய வெற்றி வந்தாலும் சரி, மிக மோசமான தோல்வி வந்தாலும் சரி, மகிழ்ச்சியான தருணமாக இருந்தாலும் சரி, சோகமான தருணமாக இருந்தாலும் சரி, அந்த உணர்விலேயே ஆத்மா நீடித்திருப்பதில்லை. மகிழ்ச்சியும் அல்லாத சோகமும் அல்லாத சமநிலைக்கு, அதாவது எதன்மீதும் பற்றில்லாத இறை நிலைக்கு ஆத்மா திரும்பிவிடும். ஆத்ம பலம் என்பது இதுதான். எந்த உணர்ச்சியாலும் பாதிக்கப்படாமல், சலனமற்று இருப்பது.
இயற்கையால் உருவான அனைத்து படைப்புகளிலும் இந்த சலனமற்ற தன்மையைப் பார்க்கலாம். மனிதனைத் தவிர. மனிதனும் இயற்கையின் படைப்புதானே, அவன் மட்டும் ஏன் மற்றவற்றிடமிருந்து விலகி நிற்க வேண்டும்? அதுதான் மனித மனத்தின் - இனத்தின் இயல்பு.
உலகிலுள்ள ஒவ்வொரு படைப்புமே இப்படித்தான் இயங்க வேண்டும்; இத்தகைய மாற்றங்களைச் சந்திக்க வேண்டும் என்கிற நியதி இருக்கிறது. அந்த நியதியின்படிதான் உலகமே இயங்கி வருகிறது. இந்த நியதியை உருவாக்கியதும் இயற்கைதான். இறை சக்திதான்.
மனித உடலையே எடுத்துக்கொள்வோமே. கருவாக்கப்பட்ட ஒரு செல்லில் உள்ள உயிரணுவுக்கு பத்து மாதத்தில் குழந்தை எப்படி வளர வேண்டும் என்ற செயல் திட்டம் இருக்கிறது.
கரு உருவான முதல் சில வாரங்களில் வெறும் சதைப் பிண்டமாகவே குழந்தை இருக்கிறது. ஆனாலும் அதிலுள்ள இதயத்துக்கான செல்கள், கண்களுக்கான செல்களோடு கலப்பதில்லை. கைகால்களின் செல்கள், மூளையின் செல்களோடு இணைவதில்லை. முற்றிலும் குழம்பிய நிலையில் இருந்தாலும் ஒவ்வொரு உறுப்புக்குமான செல்கள் சரியாகச் சேர்ந்து குழந்தைக்கு முழு உருவம் கொடுக்கின்றன.
செல்களுக்கு இந்த ஞானம் வந்ததெப்படி? யார் கொடுக்கும் உத்தரவின்படி இவை ஓர் ஒழுங்கமைப்போடு இயங்குகின்றன? முன்னரே குறிப்பிட்டது போல் இவை அனைத்தும் இறைசக்தியின் விளைவுகள். இயற்கையின் நியதிப்படி நாம் பிறந்தாலும், அதே நியதிப்படி வாழ்வதில்லை. இயற்கையின் மற்ற படைப்புகள், அதன் உத்தரவுப்படியே தொடர்ந்து இயங்குகின்றன. மாற்றங்களை அப்படியே ஏற்றுக்கொள்கின்றன. அவை குறித்து கலங்குவதும் இல்லை. ஆனந்தப்படுவதும் இல்லை. வருவதை அப்படியே ஏற்றுக்கொள்கின்றன.
இந்தத் தன்மைதான் மனிதர்களிடத்தில் இல்லாமல் போகிறது. வளர வளர இயற்கையின் நியதிக்கு எதிராக தனக்கென்று சில நியதிகளை அவன் உருவாக்கிக்கொள்கிறான். இயற்கை தன்மையில் இருந்து மெல்ல மெல்ல விலகுகிறான்.
அவனுக்கு நல்லது நடந்தால் மகிழ்கிறான். கெடுதல் வந்தால் அழுகிறான்; கோபப்படுகிறான். நல்லதே நடக்காதோ எனப் பயப்படுகிறான். நன்மையே தனக்கு ஏற்படவேண்டும்; துன்பம் வந்துவிடக் கூடாது என்று அமைதியின்றித் தவிக்கிறான். அதற்காகவே போராடுகிறான். அவன் எதிர்பார்த்தது நடந்தால் தலைகால் புரியாமல் ஆடுகிறான். எதிர்பாராதது நடந்தால் கோபம், பயம், அமைதியின்மை, போராட்டம் என்ற சுழற்சியில் சிக்கிக்கொள்கிறான்.
இயற்கையின் மற்ற படைப்புகளிடத்தில் இருக்கும் அமைதி அவனிடத்தில் இருப்பதில்லை. அனைத்துமே தனது நியதிகளின்படி நடக்கிறது என்று அவன் எண்ணிக்கொள்கிறான். மனிதனுக்கு ஏற்படும் பிரச்னைகளின் ஆணிவேர் அதுதான்.
இறை சக்தியின் சொல்படிதான் மரம், செடி, கொடி, விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களும் வாழ்கின்றன. நான் முன்னரே குறிப்பிட்டது போல், மனிதனுக்குள் ஆத்மாவின் வடிவில் இறைசக்தி உண்டு. ஆனால் மனிதன், தனக்குள் உதி த்திருக்கும் இறைசக்தியை உணர்வதில்லை. மனிதனுக்குள் இறைசக்தி இருப்பதை எப்படி புரிந்து கொள்வது?
நாம் ஓர் இரும்புத்துண்டை பார்க்கிறோம். நம் கண்ணால் பார்க்க முடிவது அதன் பௌதிக வடிவத்தைத்தான். இரும்புத்துண்டின் மூலத்தைத் தேடிக்கொண்டே போனால். அது எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், நியூட்ரான்களால் ஆனது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அவற்றை நாம் கண்ணால் பார்க்க முடியாது.
ஆக இரும்புத் துண்டு என்பது அடையாளம், எலக்ட்ரான்கள்தான் அடிப்படை உண்மை. அது போலவே, நம் பெயரும், உடலும் நமது அடையாளங்கள். உள்ளிருக்கும் ஆத்மாதான் அடிப்படை உண்மை.
அதை உணராமல் போகும்போது, ஆத்மாவின் பிரகாசம் குன்றி பலவீனமாக ஒளிர்கிறது. ஆத்மாவின் வெளிச்சம் இல்லாமல் மனிதன் தட்டுத்தடுமாறி தனது பயணத்தை மேற்கொள்கிறான். அவனது பயணம் இனிமையாக அமைய வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்?
ஒரு தீபம் அணைவது போல் மெலிதாக எரிகையில் என்ன செய்வீர்கள்?
எண்ணெய் ஊற்றி திரியைத் தூண்டி அதைப் பிரகாசமாக எரிய வைப்பீர்கள் இல்லையா?
அது போலவே, பலவீனமாக எரியும் இறைசக்தியைத் தூண்டும் வேலையைத்தான் யோகா செய்கிறது. இறைசக்தியின் பிரகாசம் அதிகரிக்க அதிகரிக்க, மனிதன் மனத்தில் அமைதி வருகிறது. மற்ற படைப்புகளுக்கும் தனக்குமான தொடர்பை அவன் உணர்ந்து கொள்கிறான்.
அவற்றைப் போலவே தன்னையும் அவன் இறைசக்தியிடம் ஒப்படைத்து விடுகிறான். இறைசக்தி எப்படியெல்லாம் வழி நடத்துகிறதோ அப்படியே அவனும் செல்கிறான். வழியில் மேடு, பள்ளம், முள், பூக்கள் என எது எதிர்ப்பட்டாலும் அவன் அது குறித்து மிகையான சந்தோஷமோ அல்லது அதிகப்படியான கவலையோ கொள்வதில்லை.
தோல்வியினால் அவனுக்கு சோர்வு ஏற்படாது. முன்னிலும் முனைப்போடு இயங்கக்கூடிய உத்வேகம்தான் உருவாகும். அதன் மூலமாக வெற்றி அவன் வசப்படும். அந்த வெற்றி, மகிழ்ச்சியையும், அடுத்தடுத்து பல இலக்குகளை நோக்கிப் பயணப்படுவதற்கான உற்சாகத்தையும் கொடுக்கும். பின்னர், இலக்கு, வெற்றி,மகிழ்ச்சி,உற்சாகம் என இவையே மனித வாழ்வின் சுழற்சியாக ஆகிவிடும். அதே சமயம், அந்த வெற்றியிலேயே, அது தந்த சந்தோஷத்திலேயே அவன் தலைகால் புரியாமல் திரிய மாட்டான். தோல்வியால் எப்படி எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருந்தானோ, அதே போன்றுதான் வெற்றியின் போதும் இருப்பான்.
சுருங்கச் சொன்னால், அவன் மனத்தில் எது வந்தாலும் சலனமின்றி ஏற்றுக்கொள்கிறஅமைதி வந்து விடுகிறது. அமைதியை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அதற்கு மிகப்பெரிய சக்தி உண்டு.
பயம், பதற்றம், கவலை என மனம் தீவிரமான உணர்ச்சி நிலையில் இருந்தால், நம் உடலிலும், மனத்திலும் குறைந்த சக்திதான் இருக்கும். ஆத்மாவால் வரும் அமைதியின் மூலமாக மனத்தின் ஆற்றல் பெருகுகிறது. அதன் சக்தி வீணடிக்கப்படாமல் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வருகிறது. முழு திறனோடும், தீவிரத்தோடும் அறிவு செயல்பட ஆரம்பிக்கிறது. உடலும் முழுபலத்தோடு அதற்கு ஒத்துழைக்க ஆரம்பிக்கிறது.
இதுவே யோகாவின் சிறப்பம்சம். உடல், மனம், ஆத்மா ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து, அவற்றை பலம் பொருந்தியதாக ஆக்குகிறது யோகா.
மனம் என்பது அறிவு, சிந்தனை, திட்டமிடுதல் ஆகியவற்றைச் சார்ந்தது. உடல் என்பது செயல்பாட்டுக்கான பலத்தைச் சார்ந்தது. ஆத்மா என்பது உள்ளே இருக்கும் இறை சக்தியைச் சார்ந்தது. இந்த மூன்றையும் ஒரே புள்ளியில் குவிக்கிறது யோகா. அதன் மூலமாக அளப்பரிய சக்தி கிடைக்கிறது. அந்தச் சக்தி, வாழ்க்கைப் பயணத்தை முற்றிலும் இனிமையானதாக மாற்றிவிடுகிறது.
பிறப்பால், சமூக, பொருளாதார நிலையால் ஒருவருக்கொருவர் பல வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், யோகா அனைத்து வேறுபாடுகளையும் தகர்த்து எறிந்து விடுகிறது. யோகாவைக் கற்பதனால் ஒரு கோடீஸ்வானும், ஒரு குடிசைவாசியும் வாழ்க்கையை ஒரே மாதிரிதான் அனுபவிப்பார்கள். ரசிப்பார்கள். வாழ்க்கையின் அனைத்து சம்பவங்களையும் ஒன்று போலவே அணுகுவார்கள்.
சுருங்கச் சொன்னால் யோகாவின் முன் அனைவரும் சமம்.

0 Comments