ஆங்கிலம் பேசக் கற்பதற்கு முதல் படி, ஆங்கிலம் பேசுவோரைக் கவனிப்பது.
ஏன் கவனிக்கவேண்டும்?
ஒரு குழந்தை எப்படித் தமிழ் பேசக் கற்றுக்கொள்கிறது என்று யோசியுங்கள். உங்கள் குழந்தைக்கு நீங்கள் எப்படித் தமிழ் பேசக் கற்றுக்கொடுத்தீர்கள் என்று யோசியுங்கள். அநேகமாக, நீங்கள் உங்கள் குழந்தைக்குத் தமிழ் பேசக் கற்றுக்கொடுக்கவே இல்லை. அதுதான் உண்மை. குழந்தையிடம் தொடர்ந்து நீங்கள் தமிழில் பேசி வந்திருக்கிறீர்கள். நீங்கள் வீட்டில் உங்களுக்குள் தமிழில் பேசிக்கொண்டிருந்திருக்கிறீர்கள். குழந்தையைப் பார்க்க வருகிற எல்லாரும் அவர்களுக்குள் தமிழில் பேசி வந்திருக்கிறார்கள். இதையெல்லாம் கவனித்துக் கவனித்துக் குழந்தை தானே எப்படிப் பேசவேண்டும் என்று கற்றுக்கொண்டு ஒவ்வொரு சொல்லாகப் பயன்படுத்தி, தவறு செய்து. அதைத் திருத்திக்கொண்டு. அதன்மூலம் சரியாகப் பேசும் இலக்கணத்தையும் கற்றுக்கொண்டு பேச ஆரம்பித்துவிடுகிறது. அவ்வப்போது குழந்தை செய்யும் சில பிழைகளை நாம் திருத்துகிறோம், அவ்வளவுதான். மற்றபடி குழந்தை தமிழ் பேசக் கற்றுக்கொண்டது முழுக்க முழுக்க கவனித்தலின்மூலம்தான்.
தமிழ்மட்டுமில்லை. எல்லா மொழிகளையும் பேசக் கற்பதற்கு இதுதான் சரியான முறை. கவனித்தால் பேசவரும்.
"என் புள்ள நல்லா இங்கிலீஷ் பேசுது' என்று சொல்கிற பெற்றோரிடம் “உங்கள் குழந்தைக்கு யார் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொடுத்தார்கள்?” என்று கேட்டால், பள்ளிக்கூடத்துல் டீச்சர்தான் கத்துக்கொடுத்தாங்க என்று பதில் வரும். ஆனால் உண்மையில் டீச்சர் மெனக்கெட்டு அதற்கு ஆங்கிலம் பேசக் கற்றுக்கொடுக்கவில்லை. மற்ற குழந்தைகளும் ஆசிரியர்களும் தங்களுக்குள் பேசிக்கொள்வதைக் கவனித்து அதைக் காப்பியடித்து, பின்னர் அதன் இலக்கண நுட்பங்களை புரிந்துகொண்டு குழந்தை ஆங்கிலம் பேசத்தொடங்கியிருக்கிறது. இந்த விஷயத்தில் நாமும் குழந்தைகளைக் காப்பியடிப்போம். பிறர் பேச்சைக் கவனித்து அதன்மூலம் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொள்வோம்.
அதுதான் எந்த ஒரு மொழியையும் கற்பதற்குச் சரியான வழி.
சரி யாரை கவனிப்பது?
இந்த விஷயத்தில் சிலர் அதிர்ஷ்டம் செய்தவர்கள். அவர்கள் வீட்டிலேயே ஆங்கிலம் நன்கு பேசக்கூடிய யாராவது இருப்பார்கள். அண்ணனோ அக்காவோ கணவரோ மனைவியோ, சில சமயங்களில் குழந்தையோ ஆங்கிலம் நன்றாகப் பேசும். அதைத் தினமும் கூர்ந்து கவனித்தாலே போதும். அவர்களுக்கு இந்தச் சொல்லை இப்படிப் பயன்படுத்தவேண்டும், அதை இப்படி மற்ற சொற்களுடன் இணைக்கவேண்டும் என்கிற மொழிநுட்பங்கள் மெதுவாகப் புரியத்தொடங்கிவிடும். நான் அப்படிதான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு எந்த மொழிநுட்பமும் வரவில்லையே என்கிறீர்களா?
சும்மா கேட்பது வேறு. கவனிப்பது வேறு. உதாரணமாக, ஒருவர் மேடையில் பேசுகிறார். நீங்கள் அந்த வழியாக நடந்து செல்கிறீர்கள். அவர் பேசுவது உங்கள் காதில் விழுகிறது. மற்றபடி நீங்கள் அதனை மனத்தில் வைப்பதில்லை.
அதற்குப் பதிலாக நீங்கள் அந்தக் கூட்டத்தில் முதல் வரிசையில் அமர்ந்து அவர் பேசுவதை உன்னிப்பாகக் கவனிக்கிறீர்கள். ஒவ்வொரு சொல்லையும் அவர் எப்படிப் பயன்படுத்துகிறார் என்று கேட்டுப் புரிந்துகொள்கிறீர்கள். இப்போது அவர் சொன்ன விஷயங்கள் இன்னும் தெளிவாக உங்களுக்குப் புரியும்.
மொழி விஷயத்திலும் அப்படிதான் ஒருவர் ஆங்கிலம் பேசுகிறார் என்று உணர்ந்து அது நம்முடைய காதில் வெறுமனே விழுவது வேறு. அவர் என்ன பேசுகிறார், எந்தெந்தச் சொற்களை பயன்படுத்துகிறார், ஏன் பயன்படுத்துகிறார், எந்த சொற்களை அவர் பயன்படுத்தவில்லை, ஏன் பயன்படுத்தவில்லை. இதே போல் நாமும் பேசவேண்டுமென்றால் எப்படிப் பேசுவது, இந்த வாக்கியத்தைச் சற்றே மாற்றினால் அவர் எப்படி பேசுவார்... இப்படி அவர்கள் பேசுவதை உன்னிப்பாகக் கவனிப்பது முற்றிலும் வேறுவிதமான ஓர் அனுபவம். அதன்மூலம் நாம் மொழிநுட்பங்களை மிக நன்றாகத் தெரிந்துகொள்ளலாம்.'
ஆக, உங்கள் வீட்டருகே யாராவது நன்றாக ஆங்கிலம் பேசினால் அவர்களை தினமும் கூர்ந்து கவனியுங்கள். ஐந்து நிமிடம், பத்து நிமிடம், இயன்றால் அரைமணிநேரம் அவர்கள் பக்கத்திலேயே இருங்கள், கஷ்டம் என்றால் ஒட்டுக்கேளுங்கள், இதைத் தொடர்ந்து கவனத்துடன் செய்துவந்தாலே உங்களுடைய பேச்சுப் பயிற்சிக்கான முதல் படி தொடங்கிவிட்டது என்று பொருள்.
ஒரு விஷயம், நன்றாக ஆங்கிலம் பேசுபவர்கள் என்ற வரையறை இங்கே மிகவும் முக்கியம். அரைகுறை ஆங்கிலம் பேசுபவர்கள், தவறாக ஆங்கிலம் பேசுகிறவர்களைக் கவனித்துப் பின்பற்ற ஆரம்பித்தீர்கள் என்றால் உங்களுடைய நிலைமை அவர்களைவிட மோசமாகதான் இருக்கும்.
ஒரு நோட்டில் ஆசிரியர் மேலே ஒரு வரி அழகாக எழுதியிருப்பார். குழந்தை அதற்குக் கீழே அதைப் பார்த்துச் சுமாராக எழுதும். ஒருவேளை அதில் ஏதாவது தவறு செய்துவிட்டால், அடுத்த வரியை எழுதும்போது. தவறான வரியைப் பார்த்து அதே தவறைத் திரும்பச் செய்யும். அதேபோல், ஆங்கிலத்தைப் பொறுத்தவரை நல்ல ஆங்கிலம் பேசுகிறவர்களைப் பின்பற்றுவது முக்கியம். அப்போதுதான் நமது 'காப்பி' நன்றாக இருக்கும். அதை நினைவில் வையுங்கள்!
என் வீட்டருகே நல்ல ஆங்கிலம் பேசுபவர்கள் யாரும் இல்லை. நான் என்ன செய்வது?
அதனால் என்ன? தொலைக்காட்சி இருக்கிறதே! அதில் திரைப்படங்கள், நாடகங்கள், நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். கிரிக்கெட் கமென்ட்ரியைக் கேட்கலாம். இணைய வசதி இருந்தால் அதிலும் பல ஆங்கில நிகழ்ச்சிகள் வருகின்றன.
ஆனால் ஒன்று, இதுபோன்ற நிகழ்ச்சிகள் எல்லாமே தினசரி வாழ்க்கையில் நாம் பேசுகிற ஆங்கிலம், அதாவது 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' என்று சொல்கிறோம் அல்லவா அதற்குப் பெருமளவில் உதவாது. காரணம், இந்த ஆங்கிலம் சற்றே பண்டிதத்தனம் கலந்து ஒருமாதிரி எழுத்து ஆங்கிலத்துக்கே அருகே இருக்கும். அல்லது, வெளிநாட்டு உச்சரிப்பில் இருக்கும், அல்லது, சாதாரணமாக நாம் பேசுகின்ற விஷயங்களை, சொற்களை அவர்கள் பயன்படுத்தமாட்டார்கள், அதை நீங்கள் அப்படியே கற்றுக்கொண்டு பயன்படுத்த இயலாது.
ஆகவேதான், உங்கள் வீட்டருகே ஆங்கிலம் பேசுகிற ஒருவரைக் கண்டறிவது முக்கியம் என்று குறிப்பிட்டோம். அவர் வீட்டருகே இல்லை, சற்றுத் தொலைவில்தான் இருக்கிறார் என்றால், சிரமப்பட்டு அங்கே சென்று அவர் பேசுவதைக் கவனித்துவிட்டு வரலாம். நிச்சயம் உழைப்புக்குப் பலன் இருக்கும். அந்த சிலபேர் ஆங்கிலம் பேசவேண்டும் என்பதற்காகவே கால்சென்டர்களை அழைப்பார்கள். அங்கே உள்ளவர்களிடம் ஏதாவது ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு அவர்கள் பேசுவதைக் கவனித்துக்கொண்டிருப்பார்கள். இப்படி ஏதோ ஒருவழியில் நல்ல ஆங்கிலம் பேசுகிறவர்களைத் தினமும் குறைந்தது 15 நிமிடமாவது கேட்கவேண்டும். இதை உங்களுடைய முதல் பயிற்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு விஷயம், ஆங்கிலம் பேசுகிறவர்களிடையே Accent எனப்படும் ஒருவகையான உச்சரிப்பு மாற்றங்கள் (கிட்டத்தட்ட நம் ஊர் வட்டார வழக்குபோல) இருக்கும். அப்படியில்லாமல் Plain English என்று சொல்லப்படும் இயல்பான எளிமையான ஆங்கிலம் பேசுகிறவர்களைக் கவனிப்பது நல்லது. தோசை சுடுகிறவர் ப்ளெயின் தோசையைக் கற்றுக்கொண்டுதானே மசாலா, ரவா என்று முன்னேற இயலும்? இதனால்தான், ஆங்கிலப் படங்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இணைய நிகழ்ச்சிகள் போன்றவற்றைவிட நிஜ வாழ்க்கையில் பேசுகிறவர்களைப் பின்பற்றுவது நல்லது ஆங்கிலம் என்று சொன்னோம். Accent என்பதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணம் வேண்டுமென்றால், மதுரைத் தமிழ் அல்லது கொங்குத் தமிழை எடுத்துக்கொள்ளுங்கள். புதிதாகத் தமிழ் கற்கிற ஒருவர் எலே, என்ன செய்யறே?" என்று பேசக் கற்பது நல்லதா, அல்லது, “நீங்க என்ன செய்யறீங்க?' என்று பொதுவாக எல்லாரும் பேசுகிற, புரிந்துகொள்கிற தமிழைக் கற்றுக்கொள்வது நல்லதா? இதன் அர்த்தம் நெல்லைத் தமிழோ மதுரைத் தமிழோ மோசம் என்பதல்ல.
அதுவும் ஒருவகையான நல்ல உச்சரிப்புதான். ஆனால் அது ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்மட்டும் புரியக்கூடிய உச்சரிப்பு. ஆங்கிலத்திலும் அதுபோலச் சில சொற்கள் Accentஉடன் உச்சரிக்கப்படும்போது, அவை பெரும்பாலானோருக்குப் புரியாமல்போகிற வாய்ப்பிருக்கிறது.
ஆகவே, நீங்கள் Accentஉடன் பேசுகிற ஒருவருடைய பேச்சைக் கேட்டு, ‘நமக்கு ஒன்றுமே புரியவில்லையே!” என்று கவலைப்படுவதைவிட, அதை ஈயடிச்சான் காப்பி அடிப்பதைவிட, நமக்குப் புரிகிற ஆங்கிலத்தைப் பேசுகிற ஒருவரைப் பின்பற்றுவது நல்லது!
How to speak english - training - english tamil - (Part-4) to be continued)..
0 Comments