ஆங்கிலம் பேசத்தொடங்கும் பலர் சந்திக்கிற முதல் மனத்தடை, தவறாகப் பேசினால் மற்றவர்கள் சிரிப்பார்களோ? முதலில், மற்றவர்கள் சிரிக்கிறார்கள் என்பதாலேயே ஒரு விஷயம் வெட்கப்படவேண்டியதாகிவிடாது.
உதாரணமாக, ஒரு சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது. பக்கத்தில் டிராஃபிக் காவலர்கள் யாரும் இல்லை. ஆகவே எல்லாரும் சர்சர் என்று சென்றுகொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் நீங்கள் அங்கே வண்டியை நிறுத்திப் பச்சை விளக்கு வந்தபிற்கு சென்றீர்கள் என்றால், உங்களைப் பார்த்து எல்லாரும் சிரிப்பார்கள். ஆனால், அது வெட்கப்படவேண்டிய விஷயமே இல்லை.
அதேபோல், எல்லாரும் லஞ்சம் வாங்கும் ஓர் அலுவலகத்தில் நீங்கள் லஞ்சம் வாங்காமல் கறாராக இருந்தால், பிழைக்கத்தெரியாதவர் என்று உங்களைப் பார்த்துச் சிரிப்பார்கள். அதுவும் வெட்கப்படவேண்டிய விஷயம்இல்லை. ஆக, ஊரே சிரிக்கிறது என்பதால்மட்டும் ஒரு விஷயம் தவறானதாக. வெட்கப்படவேண்டியதாக ஆகிவிடாது. அப்படிச் சிரிக்கிறவர்களால் வெறுமனே சிரிக்கதான் இயலும், எதையும் சாதிக்க இயலாது. அவர்களைக் கண்டுகொள்ளாதீர்கள்.
அப்படியானால், நாம் எதைப் பார்த்து வெட்கப்படவேண்டும்? நம்மைப் பார்த்து நாமே சிரித்துக்கொள்கிற, நம் செயலை நினைத்து நாமே வருந்துகிற சூழ்நிலை ஏற்பட்டால்மட்டும்தான் வெட்கப்படவேண்டும். உதாரணமாக, கடைக்காரர் உங்களுக்குச் சில்லரை தரும்போது ஒரு 100 ரூபாய் நோட்டைக் கூடுதலாகத் தந்துவிடுகிறார். இந்த விஷயம் யாருக்கும் தெரியாது. நீங்கள் அந்த திருப்பிக் கொடுக்கவில்லை என்றாலும் அதை யாரும் கவனிக்கப்போவதில்லை.
ஆனால், அப்போது நீங்களே உங்களை நினைத்து வெட்கப்படுகிறீர்கள் அல்லவா? அந்தப் பணத்தைத் திருப்பித் தரும்வரை உங்கள் மனம் உங்களை உறுத்துகிறது அல்லவா? அப்படி நம்மைப் பார்த்து நாமே சிரித்துக்கொள்கிற சூழ்நிலை ஏற்பட்டால்மட்டும்தான் அதைப்பற்றிக் கவலைப்படவேண்டும். மற்ற யார் சிரித்தாலும் பொருட்படுத்தக்கூடாது. ஆக, ஆங்கில விஷயத்தில் நீங்கள் தவறாகப் பேசினால் மற்றவர்கள் உங்களைப் பார்த்துச் சிரிப்பார்களோ என்கிற கவலையை முதலில் நிறுத்துங்கள். ஆங்கிலம் தவறாகப் பேசுகிறோம் என்று நீங்கள் உங்களைப் பார்த்துச் சிரித்துக்கொள்கிறீர்களா என்று யோசியுங்கள். அதுதான் உங்களைக் கற்கவைக்கும்.
ஆங்கிலம் தவறாக பேசுவது என்பது நிச்சயம் வெட்கத்துக்குரிய ஒரு விஷயம்தான் ஆங்கிலம் என்றில்லை, எந்த ஒரு மொழியையும் தவறாகப் பேசுவது வெட்கத்துக்குரிய விஷயமே. அம்மொழியை முறைப்படி கற்றுக்கொண்டு பேசத் தொடங்குவதே சரி,உண்மையில், இதை நாம் இருவிதமாகப் பார்க்கவேண்டும். ஆங்கிலத்தில் நன்கு பேசுவதற்கு ஒருவருக்கு இருவிதமான வளங்கள் தேவைப்படுகின்றன:
1. சொல்வளம் 2. இலக்கண வளம்.
சொல்வளம் ஒரு விஷயத்தைச் சொல்லும்போது அதற்கு ஏற்ற சொற்கள் கிடைப்பது முக்கியம். சொற்கள் கிடைக்கவில்லை என்றாலோ தவறான சொல்லைப் பயன்படுத்திவிட்டாலோ அந்த வாக்கியத்தின் பொருள் கேட்பவருக்குப் புரியாது.
ஆங்கிலத்தைப் பொறுத்தவரை உங்களுக்குத் தெரிந்த சொற்கள் 500 என்று வைத்துக்கொள்வோம். அதை 1000, 2000, 3000 என மாற்றுவது ஒரு நீண்டகாலப் பயிற்சி. அதை இந்தக் கணத்திலிருந்து தொடங்கலாம். நமக்கு ஆங்கிலத்தில் சொற்கள் குறைவாகத் தெரிகிறதே என்று வெட்கப்படவேண்டியதில்லை. தெரிந்த சொற்களை வைத்துச் சமாளிக்கலாம்.
உதாரணமாக, Chair என்ற சொல் உங்களுக்கு தெரியவில்லை என்றால் Sitting Place என்று சொல்லலாம், அதுவும் தெரியாவிட்டால் Bench என்றுகூட சொல்லலாம். இதெல்லாம் தவறுதான். ஆனால் கேட்கிறவர் அதை Chair என்று சொல்லவேண்டும்' என்று திருத்தினால், நீங்கள் அந்தப் புதிய சொல்லைக் கற்றுக்கொள்கிறீர்கள், அடுத்தமுறை அதைச் சரியாகப் பேசுகிறீர்கள்.
இப்படி ஒவ்வொரு நாளும் புதிய சொற்களை, அவற்றுக்கான பொருள்களைத் தொடர்ந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற முனைப்பு உங்களிடம் இருந்தால் போதும். சொல்வளம் குறைவாக இருக்கிறதே என்று எண்ணி நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை. வெட்கப்படவேண்டியதில்லை. காரணம், எல்லாச் சொற்களையும் அறிந்தவர் யாரும் இல்லை.
இலக்கண வளம்
எந்த ஒரு வாக்கியத்தையும் முறைப்படி சொல்வதற்கு அதற்கான இலக்கணம் தெரிந்திருக்கவேண்டும். நான் நடக்கிறேன்” என்று சொல்வது இலக்கணப்படி சரியான வாக்கியம். “நான் நடக்கிறது” என்று சொன்னாலும், கேட்கிறவர்களுக்கு ஓரளவு விஷயம் புரிந்துவிடும். ஆனால், இலக்கணப்படி அது தவறு. அப்படிப் பேசுவதை எண்ணி நிச்சயம் வெட்கப்படவேண்டும்.
சொல்வளத்தை மேம்படுத்துவது எந்த அளவு முக்கியமோ அதைவிடப் பலமடங்கு இலக்கண வளத்தை மேம்படுத்துவது முக்கியம். நல்லவேளையாக, இலக்கண வளத்தை மேம்படுத்திக்கொள்வது எளிது.
அதற்குச் சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொண்டால் போதும், அவற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் போதும், மிக விரைவில் அடிப்படை ஆங்கில இலக்கணத்தைப் புரிந்துகொண்டு பேசத் தொடங்கிவிடலாம்.
நாம் ஒன்றும் ஷேக்ஸ்பியர் ஆங்கிலம் பேசப்போவதில்லை. நிஜ வாழ்க்கையில் சாதாரணமாக எல்லாரிடமும் பேசுவதற்கு ஒரு ஐந்தாறு வகையான வாக்கிய அமைப்புகள் போதும், அவற்றுக்கான இலக்கணங்களைக் கற்றுக்கொள்வது மிகவும் எளிது.
இவற்றைக் கற்றுக்கொண்டுவிட்டால், சாதாரணமாக யாரிடமும் பேசலாம். அதறுமேல் உள்ள விசேஷ வாக்கிய அமைப்புகளையெல்லாம் பின்னர் கற்றுக்கொள்ளலாம்.
ஆக, சொல்வளத்தை முன்னேற்றுவது ஒரு நீண்ட நாள் பயிற்சி தொடர்ந்து செய்யவேண்டிய பயிற்சி. ஆனால், இலக்கணத்தில் குறைந்தபட்சம் அடிப்படை நுட்பங்களையாவது தெரிந்துகொள்வது ஓர் உடனடி பயிற்சி. இந்த இரண்டையும் இந்தக் கணத்திலிருந்து செய்யவேண்டும் என்று நீங்கள் தீர்மானித்துவிட்டால் உங்களைப்பார்த்து நீங்கள் சிரித்துக்கொள்ளவேண்டியதில்லை வேறு யார் உங்களைப் பார்த்துச் சிரித்தாலும் நீங்கள் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.
சிரிப்பதை நிறுத்திவிட்டீர்களா? அடுத்து என்ன செய்யலாம்?
How to speak english - training - english tamil - (Part-3) to be continued)..
0 Comments